ஞாயிறு, 6 ஜனவரி, 2019

எழுதுதல் ஏன் அவசியம்?


நாம் ஏன் எழுத வேண்டும்?

எழுதுவது என்பது சிலருக்கு கலை, சிலருக்கு வேலை ,சிலருக்கோ அது ஒரு மலை.

இந்தக் கட்டுரை கடைசி சிலருக்காக.



எழுதும் பழக்கம் எப்படி உதவுகிறது,ஒருவரை எவ்வாறெல்லாம் மாற்றுகிறது என்று பார்ப்போம்.

அதற்கு முன் தினமும் என்ன எழுதலாம் என்று பார்ப்போம்.

1.அன்றாட நிகழ்வுகள்
2.கனவுகள்
3.மன அழுத்தங்கள்
4.பட்டியல்கள்
5.கடிதங்கள்



அன்றாட நிகழ்வுகள்

தினமும் இரவு தூங்குவதற்கு முன் அன்றைய நிகழ்வுகளை எழுதும் பழக்கம். இது நிறைய மக்களிடம் உள்ளது. இதனால் ஒருவர் அன்று என்ன செய்தோம், இன்று என்ன செய்தோம் என்று நிறைய விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மேலும் பல வருடங்கள் கழித்து அதை பார்க்கும் பொழுது அன்றைய நாள் அழகாக நமது நினைவில் வந்து செல்லும்.


கனவுகள்

தினமும் இரவு தூங்கும் போது நமக்கு கனவுகள் வரும். ஆனால் எவ்வளவு நேரம் அது நம் நினைவில் இருக்கும். சில கனவுகள் சில நொடிகளில் மறந்துவிடும் அல்லது சில நாட்களில் மறைந்துவிடும். ஆனால் அதை எழுதி வைக்கும் பொழுது நாம் நமது கனவுகளை விளக்க , விளங்க மிகவும் உதவிகரமாக இருக்கும். நமது உள்மனதை புரிந்து கொள்ள கனவுகளின் அர்த்தங்களை அறிந்து கொள்ள  இந்த கனவுகளை எழுதும் பழக்கம் மிகவும் பயன்படும்

மன அழுத்தங்கள்

மன அழுத்தங்களை எழுத்துக்களாக எழுதும் பொழுது ,நமக்கு அது மருந்தாக மன அழுத்தத்தில் இருந்து வெளிவர உதவிகிறது. எல்லா நேரங்களிலும் நாம் நமது அழுத்தங்களை அடுத்தவரிடம் கொட்டி தீர்க்கும் வாய்ப்பு உருவாவதில்லை அல்லது விருப்பம் இல்லாமலும் இருக்கலாம். அந்த சமயங்களில் எழுதி அழுத்தங்களை தீர்த்துக் கொள்ளலாம்.பல சமயங்களில் அது தீர்வுக்கும் வழிவகுக்கும்.

பட்டியல்கள்

பட்டியல் என்றாலே அது நீண்டு கொண்டே போகும். எனவே நினைவில் வைத்துக் கொள்வது சிரமம். எழுதி எடுத்துச் சென்றால் எளிதாக இருக்கும். நம் அன்றாட வாழ்வில் பல பட்டியல்கள் போட நேரிடும். அதை குறிப்பாய் எடுத்துக் கொள்ளும் அவசியம் நம்மில் பலரும் பல தருணங்களில் உணர்ந்திருப்போம்.
அன்றாட மளிகை பட்டியலில் தொடங்கி இலக்கு பட்டியல், நிகழ்வுகள் பற்றிய பட்டியல், காரண பட்டியல் என வகைவகையாய் பட்டியலிடலாம்


கடிதங்கள்

கடிதம் எழுதுவது நம்மில் பலரிடம் இல்லாத பழக்கம். நாம் ஒருவரிடம் சொல்ல நினைத்ததை, நேரில் சொல்ல முடியாததை கடிதங்கள் வாயிலாக தெரியப்படுத்தலாம்.

இவ்வாறு பல்வேறு வகைகளில் எழுதும் பழக்கம் நம்மை செம்மைப்படுத்துகிறது.அதனால் எழுதுவோம், எழுதுவோம் ,எழுதிக் கொண்டே இருப்போம்!!!!!